திடீரென வீசிய சூறைக்காற்றால் ஏலகிரி மலைப்பாதையில் தைலமரம் முறிந்து விழுந்தது- போக்குவரத்து பாதிப்பு

திடீரென வீசிய சூறைக்காற்றால் ஏலகிரி மலைப்பாதையில் தைலமரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

Update: 2020-08-06 08:22 GMT
ஜோலார்பேட்டை,

ஏலகிரிமலையில் நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து திடீரெனச் சூறைக்காற்று வீசியது. இதனால் ஏலகிரிமலைப்பாதையில் 13-வது கொண்டை ஊசி வளைவு அருகில் ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த தைலமரம் ஒன்று மலைப்பாதையின் நடுவே முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள்கள், அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

மரம் விழுந்த நேரத்தில் அந்த வழியாக எந்த வாகனமும், மக்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அத்துடன் ஏலகிரி மலையில் இருந்து அடிவாரம் பகுதியான சின்னபொன்னேரிக்கும், அங்கிருந்து ஏலகிரி மலை கிராமங்களுக்கும் செல்ல முடியாமல் மலைப்பாதையில் மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் விரைந்து வந்து சாலையில் முறிந்து விழுந்த தைல மரத்தை வெட்டி அகற்றினர். இதையடுத்து மலைப்பாதையில் போக்குவரத்துச் சீரானது.

மேலும் செய்திகள்