குமரியில் மேலும் 5 பேர் பலி: புதிதாக 147 பேருக்கு தொற்று

குமரி மாவட்டத்தில் புதிதாக 147 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-08-06 07:20 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்போது பலி எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பரவல் எப்போது குறையும்? என்ற ஏக்கத்தில் அனைத்து மக்களும் தவித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி 66 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்து இருந்தனர். இந்த நிலையில் மேலும் 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள். அதாவது கன்னியாகுமரியை சேர்ந்த 67 வயது ஆண், தக்கலை பகுதியை சேர்ந்த 75 வயது ஆண், நாகர்கோவிலை சேர்ந்த 67 வயது பெண், அச்சன்குளம் பகுதியை சேர்ந்த 67 வயது பெண், புதூர் பகுதியை சேர்ந்த 60 வயது பெண் என மொத்தம் 5 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும், கொரோனா கவனிப்பு மையங்களிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ஏற்கனவே 5 ஆயிரத்து 304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது பாதிக்கப்பட்டுள்ள 147 பேரையும் சேர்த்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 451 ஆக உயர்ந்து இருக்கிறது.

மேலும் செய்திகள்