வீட்டை விட்டு விரட்டியதால் ஆத்திரம்: தலையில் கல்லைப்போட்டு மெக்கானிக் படுகொலை - தந்தை கைது

திண்டுக்கல் அருகே, வீட்டை விட்டு விரட்டியதால் மெக்கானிக்கின் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-08-06 06:59 GMT
குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் பழைய கரூர் சாலை அருகே உள்ள என்.பாறைப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 48). திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி பசுபதி. இவர்களது மகன் விக்னேஸ்வரன் (25). இவர், சீலப்பாடியில் உள்ள ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

விக்னேஸ்வரனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தந்தையுடன் விக்னேஸ்வரன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த விக்னேஸ்வரன், தாய்-தந்தையிடம் தகராறில் ஈடுபட்டதோடு அவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு வீட்டைவிட்டு வெளியே செல்லும்படி கூறினார். இதனால் மனமுடைந்த தம்பதியினர் வீட்டைவிட்டு வெளியேறி அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.

தனது மகனே, தன்னை வீட்டைவிட்டு துரத்தியதை நினைத்து அய்யப்பன் இரவு முழுவதும் தூங்காமல் மன உளைச்சலில் இருந்தார். பின்னர் அதிகாலையில் எழுந்து தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் விக்னேஸ்வரன் மதுபோதையில் மயங்கி கிடந்தார். மகனை பார்த்ததும் அய்யப்பனுக்கு ஆத்திரம் அதிகமானது.

இதையடுத்து வீட்டருகே கிடந்த கல்லை எடுத்துச்சென்று மகனின் தலையில் போட்டுவிட்டு தப்பிச்சென்றார். இதில், விக்னேஸ்வரன் தலை மற்றும் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இதுகுறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்