திருச்சியில் வார்டனை தாக்கிவிட்டு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 2 சிறுவர்கள் தப்பி ஓட்டம்
வார்டனை தாக்கிவிட்டு திருச்சி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 2 சிறுவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மலைக்கோட்டை,
திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய மற்றும் தண்டனை அடைந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மொத்தம் 11 பேர் 2 அறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இவர்களில் திருச்சி காந்திமார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன் மற்றும் திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 16 வயது சிறுவனும் அடங்குவர்.
இந்தநிலையில் இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் அன்பழகன் நேற்று காலை 7 மணிக்கு கழிவறைக்கு சென்றார். அப்போது கூர்நோக்கு இல்லத்தின் வார்டன் ராஜா (வயது 53), அந்த 2 சிறுவர்களும் இருந்த அறைக்குள் அவர்கள் குளிப்பதற்காக வாளியில் தண்ணீர் கொண்டு சென்றார். அப்போது சிறுவர்கள் இருவரும் அவரை தலையில் தாக்கி அறைக்குள் தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
அவர்கள் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை. இதுபற்றி கூர்நோக்கு இல்ல அதிகாரி யோவான் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார், தப்பி ஓடிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். பணியில் கவனக்குறைவாக இருந்த ஆயுதப்படை போலீஸ்காரர் அன்பழகன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.