பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை-ரூ.58 ஆயிரம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பக்ரீத் பண்டிகை கொண்டாட வெளியூர் சென்றிருந்த நிலையில் பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7½ பவுன் நகை, ரூ.58 ஆயிரத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உள்ள அருணாசல கவுண்டர் நகரை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மனைவி ஷகிலா பேகம் (வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மேலும் அப்துல் காதர் துபாயில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் வீட்டில் ஷகிலா பேகம், தனது மகன், மகள் மற்றும் தாய் ஆஷாபீவி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக ஷகிலா பேகம் திருச்சி மாவட்டம் துறையூர் சித்தரப்பட்டியில் வசிக்கும் தனது அக்காள் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஷகிலா பேகத்தின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர், ஷகிலா பேகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து ஷகிலா பேகம் தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு புறப்பட்டு வந்தார்.
அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அறைகளில் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. மேலும் அதில் இருந்த 7½ பவுன் நகை, ரூ.58 ஆயிரம் ரொக்கம், வெள்ளிக் கொலுசு ஜோடி ஒன்று ஆகியவை திருடு போயிருந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.