அரக்கோணத்தில், மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா
அரக்கோணத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு மையத்தில் வீரர்கள் உள்பட 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரக்கோணம்,
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் நகரிகுப்பம் பகுதியில் மத்திய அரசின் தொழில் பாதுகாப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து காவலர், சப்-இன்ஸ்பெக்டர் போன்ற பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி பெறும் வீரர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு பணிக்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில், உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மாதம் இங்கு பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள் 16 பேர் பாதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் தக்கோலம் சகாய தோட்டம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணமடைந்து பயிற்சிக்கு திரும்பினர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இங்குள்ள வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வீரர்கள், மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் 65 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக தக்கோலம் சகாயதோட்டம் பகுதியில் தனியார் கல்லூரியில் உள்ள சிறப்பு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து பயிற்சி மையத்தில் உள்ள உயர் அதிகாரிகள், வீரர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.