வட மாநிலத்தினருக்கு வேலை வழங்குவதை கண்டித்து: ரெயில்வே தொழில் பழகுனர்கள், சமூக ஆர்வலர்கள் சாலை மறியல் - பொன்மலையில் பரபரப்பு
தென்னக ரெயில்வேயில் வட மாநிலத்தினருக்கு வேலை வழங்குவதை கண்டித்து திருச்சி பொன்மலையில் ரெயில்வே தொழில்பழகுனர்கள், சமூக ஆர்வலர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்மலைப்பட்டி,
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ரெயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி.) நடத்திய தேர்வில் தேர்வான 400-க்கும் மேற்பட்ட வடமாநிலத்தினருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி ஆணை வழங்கும் பணி திருச்சி பொன்மலை ரெயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்காக ஒடிசா, பீகார், மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் திருச்சி வந்தனர். திருச்சி விமான நிலையத்தில் இவர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு முடிவுகள் வந்த பின்னரே இவர்கள் இங்கு வந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை இவர்கள் சான்றிதழ்களுடன் திருமண மண்டபம் அருகே காத்திருந்தனர். இதனை அறிந்த ரெயில்வேயில் தொழில் பழகுனர் பயிற்சி முடித்தவர்களும், சமூக ஆர்வலர்களும், அனைத்து பணியிடங்களும் வட மாநிலத்தவர்களுக்கு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொன்மலை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வடமாநிலத்தினர் திரண்டு நின்று கொண்டிருந்த ரெயில்வே திருமண மண்டபம் முன் இவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதனால், ரெயில்வே அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியை நிறுத்தினர். இதைத்தொடர்ந்து பொன்மலை போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஊரடங்கு சமயத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்றை பரப்பும் வகையில் கூடி இருக்கிறார்கள். கொரோனா பரிசோதனைக்கு பின்னர் தனிமைப் படுத்தப்பட்டார்களா?, முறையாக இ-பாஸ் வாங்கி வந்தார்களா? என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் போலீசாரிடம் புகார் செய்தனர். இதுபற்றி உரிய விசாரணை நடத்துவதாக போலீசார் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.