வாணியம்பாடியில், குடிநீர் கேட்டு பெண்கள் திடீர் சாலை மறியல்

வாணியம்பாடியில் குடிநீர் கேட்டு பெண்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-08-04 05:33 GMT
வாணியம்பாடி,

வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 36 வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தக் குடிநீர் செல்லும் மெயின் குழாய்களில் பல இடங்களில் உடைப்பட்டதால், அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார்கள் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

மேலும் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் ஒரு மாதமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி பெண்கள் பலர் திரண்டு வந்து காலிக்குடங்களுடன் வாணியம்பாடி-வேலூர் சாலையில் கோணாமேடு அம்பேத்கர் சிலை எதிரே திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாணியம்பாடி தாசில்தார் சிவப்பிரகாசம் மற்றும் டவுன் போலீசார், நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததன் பேரில் அந்தப் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்