விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 156 பேருக்கு கொரோனா தொற்று - நரசிங்கபுரத்தில் மூதாட்டி பலி
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் கொரோனாவுக்கு நரசிங்கபுரத்தை சேர்ந்த மூதாட்டி பலியானார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மின்னல் வேகத்திலும், அதிதீவிரமாகவும் பரவி வருகிறது. அதுபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நோய் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரம் வி.மருதூர் நரசிங்கபுரத்தை சேர்ந்த 80 வயதுடைய மூதாட்டி, கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற தொந்தரவுகளால் மிகவும் அவதிப்பட்டார். இதற்காக அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவருடைய உமிழ்நீர், பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. இதன் முடிவில் அவர், கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து கண்காணித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். தொடர்ந்து, சுகாதாரத்துறை விதிமுறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இறந்த அவருடன் யார், யாரெல்லாம் தொடர்பில் இருந்துள்ளனர் என்ற விவரங்களை சேகரித்து அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 300-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் மேலும் 90 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை, வளவனூர் போலீஸ்காரர், விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர், நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலகத்தில் பணியாற்றி வரும் கண்காணிப்பாளர் உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட 90 பேரும் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரத்தில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை, மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,112 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று ஒரே நாளில் 250 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 3,257 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 3,840 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 2,903 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று 270 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் 66 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,906 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொது மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.