ராமேசுவரத்தில், நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம்

ராமேசுவரத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-08-03 22:00 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் கரையோரம் உள்ள கடல் பகுதியில் சிறிய வத்தை மற்றும் நாட்டுப்படகுகளுக்கு இடையூறாக மீன் பிடித்து வரும் விசைப் படகுகள் மீதும், அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி வரும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் மீன் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். 

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீன் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என கூறியதை தொடர்ந்து மீனவர்கள் அலுவலகத்தின் வாசல் பகுதியில் நின்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். 

போராட்டத்தில் சி.ஐ.டி.யூ. கடல்சார் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட தலைவர் ஜஸ்டின், மாவட்ட பொருளாளர் சுடலை காசி, தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின், ஓலைகுடா கிராமத்தலைவர் மாரி, தண்ணீர் ஊற்று கிராமத் தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ராமநாதபுரம் மீன்துறை துணை இயக்குனர் பிரபாவதி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது அவர், தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் பிடிப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவதோடு கரையோரம் உள்ள கடல் பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் நடத்திய மீனவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்