அஞ்செட்டி அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து குதறியதில் லாரி டிரைவர் சாவு

அஞ்செட்டி அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது முதலை கடித்து குதறியதில் லாரி டிரைவர் இறந்தார்.

Update: 2020-08-03 22:00 GMT
தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகாவுக்கு உட்பட்ட நாட்றாம்பாளையம் அடுத்துள்ள பூமரத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 40). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் ஆடி 18 என்பதால் தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலு அடுத்துள்ள மொசமடவு என்ற இடத்தில் காவிரி ஆற்றில் குளித்துகொண்டு இருந்தார்.

அப்போது திடீரென அவரை முதலை ஒன்று தண்ணீருக்குள் இழுத்து சென்று கடித்து குதறியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து அவரை தேடினார்கள். மேலும் இதுகுறித்து அவர்கள் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதலை தண்ணீருக்குள் இழுத்து சென்ற காட்டுராஜாவை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. மேலும் தேடும் பணியும் நிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக போலீசார் காட்டுராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர் முதலை கடித்து குதறியதில் இறந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் காட்டுராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற லாரி டிரைவரை முதலை கடித்து குதறிய சம்பவத்தால் பூமரத்துபள்ளம் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்