ஊத்தங்கரை அருகே, மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் சுட்டுக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஊத்தங்கரை அருகே மான் வேட்டைக்கு சென்ற வாலிபர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு. இந்த காட்டில் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் பெருமாள் கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்த கமலக்கண்ணனும் (வயது 21), அவரது நண்பரான மகனூர்பட்டியை சேர்ந்த சிவாவும் (35) நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டிற்கு மான் வேட்டைக்கு சென்றனர்.
இதற்காக அவர்கள் காட்டில் மான் வேட்டைக்காக சுருக்கு வலையை வைத்து இருந்தனர். அப்போது திடீரென்று மர்ம நபர்கள் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் கமலக்கண்ணனின் வயிற்று பகுதியில் குண்டு பாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிவா அங்கிருந்து ஓடி கமலக்கண்ணனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அவர்கள் காட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு கமலக்கண்ணன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அவர்கள் கதறி அழுதனர். தகவலின்பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கமலக்கண்ணனும், சிவாவும் காட்டிற்கு வேட்டைக்கு சென்ற நேரத்தில் மற்ற வேட்டைக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் கமலக்கண்ணன் இறந்தாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இது தொடர்பாக உடன் சென்ற சிவாவிடமும் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணனை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஊத்தங்கரை அருகே காட்டிற்கு வேட்டைக்கு சென்றவர், துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.