விபத்தில் ஒரு காலை இழந்தவர்: போக்குவரத்து இல்லாததால், 165 கி.மீ. தூரம் ஒரே காலில் சைக்கிளில் பயணம் - தஞ்சையில் இருந்து மதுரைக்கு வழக்கு ஆவணங்களை எடுத்து சென்றார்
விபத்தில் ஒரு காலை இழந்தவர், தற்போது போக்குவரத்து இல்லாததால் 165 கி.மீ. தூரம் ஒரு காலிலேயே சைக்கிளில் சென்றார். அவர் தஞ்சையில் இருந்து மதுரைக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை எடுத்து சென்றார்.
தஞ்சாவூர்,
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து இல்லாததால் வேலைக்காக வெளியூர் செல்பவர்களும், பணி நிமித்தம் காரணமாக செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சையை சேர்ந்த விபத்தில் ஒரு காலை இழந்தவர், பஸ் இயங்காததால் தஞ்சையில் இருந்து மதுரைக்கு இழப்பீடு வழக்கு தொடர்பாக ஆவணங்களை வக்கீலிடம் ஒப்படைப்பதற்காக ஒற்றைக்காலில் சைக்கிளில் சென்றார்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் ராஜா(வயது40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி தேவி. இவர்களுக்கு ராம்குமார், ராஜேஷ் என்ற மகன்களும், ரம்யா என்ற மகளும் உள்ளனர். இவர், தற்போது தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் வசித்து வருகிறார்.
ராஜா தனது 14 வயதில் வேலைக்காக தஞ்சைக்கு வந்து உறவினர் வீட்டில் தங்கினார். ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டையொட்டி மதுரையில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக நண்பர்களுடன் சேர்ந்து வேனில் சென்றார். மதுரை அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரியில், ராஜா உள்ளிட்டவர்கள் சென்ற வேன் மோதியது. இதில் ராஜாவின் இடதுகால் சிக்கி துண்டானது. இதனால் தற்போது ஊன்று கோல் துணையுடனேயே ராஜா நடந்து வருகிறார். இந்த நிலையில் ராஜா தனக்கு விபத்து இழப்பீடு கேட்டு மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
இந்த வழக்கை அவர் மேல்முறையீடு செய்யாமல் விட்டு விட்டார். இந்த நிலையில் இந்த வழக்கை மேல் முறையீடு செய்வதற்காக தனது நண்பர் ஒருவர் உதவியுடன் சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வக்கீல் ஒருவர் ஏற்பாடு செய்துள்ளார். இதையடுத்து விபத்து தொடர்பான ஆவணங்களை எடுத்துசெல்வதற்காக ராஜா கடந்த மார்ச் மாதம் மதுரை செல்ல முயன்றார். அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் அவர் மதுரை செல்ல முடியாமல் தவித்து வந்தார். விபத்தில் ஒற்றைக்காலை இழந்த அவர் தனது தன்னம்பிக்கையை இழந்து விடவில்லை. இதனால் அவர் தனக்கு இருக்கும் இன்னொரு ஒற்றைக்காலில் சைக்கிளில் மதுரை செல்ல முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை 6 மணிக்கு தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ரவுண்டானாவில் இருந்து 165 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதுரைக்கு சைக்கிள் மூலமாக பயணத்தை மேற்கொண்டார்
இது குறித்து ராஜாவிடம் கேட்டபோது, “இன்னும் எவ்வளவு நாட்கள் ஊரடங்கு நீடிக்குமோ தெரியவில்லை. அதனால் சைக்கிளில் செல்வது என முடிவு செய்தேன். நான் ஒரு காலுடன் சைக்கிளை அதிக கிலோ மீட்டர் ஓட்டி உள்ளேன். அதனால் எனக்கு சைக்கிள் பயணம் சிரமம் கிடையாது. எனவே மதுரைக்கு சைக்கிளிலேயே சென்று, வக்கீலிடம் ஆவணங்களை கொடுக்க முடிவு செய்தேன். இது குறித்து வக்கீலிடம் பேசினேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என தெரிவித்தார்.
இதையடுத்து சைக்கிளிலேயே புறப்பட்டுள்ளேன். இந்த வழக்கு முடிந்து இதில் கிடைக்கும் இழப்பீடு தொகையை விபத்தால் மாற்றுத்திறனாளி ஆனவர்களுக்கு சட்ட உதவி செய்ய ஒரு பங்கு கொடுக்க உள்ளேன். மேலும் அதிக விபத்துகள் நடக்கும் தமிழகத்தில் விபத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை மையம் தொடங்கி அதற்கு ஒரு பங்கு தொகையை பயன்படுத்த உள்ளேன்” என்றார்.