விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிள்ளையார் வேடமணிந்து மனு அளித்த சிவசக்தி சேனா இயக்கத்தினர்

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கவேண்டும் என்று சிவசக்தி சேனா இந்து மக்கள் கட்சியின் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2020-08-03 23:00 GMT
வேலூர்,

சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்க நிறுவனர் ராஜகோபால் தலைமையில் மாநில இளைஞரணி தலைவர் கிளி, அமைப்புக்குழு செயலாளர் நேரு, குடியாத்தம் மேற்கு மாவட்ட தலைவர் வசந்த் மற்றும் நிர்வாகிகள், பிள்ளையார் வேடமணிந்த நபருடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு கோரிக்கை மனு அளிக்க வந்தனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டும் மனு அளிக்க செல்லும்படி தெரிவித்தனர். அதையடுத்து விநாயகர் வேடமணிந்த நபருடன் 5 பேர் மனு அளிக்க சென்றனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் போடும் பெட்டியில் கோரிக்கை மனு போட்டனர்.

அந்த மனுவில், நாடு முழுவதும் வருகிற 22-ந் தேதி விநாயகர் சதுர்த்திவிழா கொண்டாடப்பட உள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் உள்பட நாடு முழுதும் பல லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு விநாயகர் சதுர்த்திவிழா முக்கிய உந்து சக்தியாக இருக்கும் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்.

எனவே வழக்கம்போல் அரசின் விதிமுறைகளை பின்பற்றி 9 அடி உயர விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும். சிவசக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் சார்பில் 50 விநாயகர் சிலைகள் வைக்கவும், அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்