மதுரையில், மேலும் 178 பேருக்கு கொரோனா; 6 பேர் உயிரிழப்பு

மதுரையில் மேலும் 178 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 6 பேர் இறந்தனர்.

Update: 2020-08-03 05:00 GMT
மதுரை, 

மதுரையில் கடந்த சில தினங்களாகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்தநிலையில், மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் மேலும் 178 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் 142 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் போலீஸ், டாக்டர்கள், மருத்துவமனை பணியாளர்கள், நர்சுகள், அரசு ஊழியர்கள் என 8 பேர் பாதிக்கப்பட்டனர். வெளி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், 3 கர்ப்பிணிகளும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோல் 100-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக் கிறார்கள்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 352 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் 2 ஆயிரத்து 354 ஆக உயர்ந்திருக்கிறது.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், நேற்று 114 பேர் குணமடைந்ததை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனுடன் சேர்ந்து மதுரையில் மொத்தமாக 8 ஆயிரத்து 745 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.

மதுரையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 247 பேர் இதுவரை இறந்துள்ளனர். இந்தநிலையில், நேற்றும் 6 பேர் உயிரிழந்தனர். அவர்கள் 47, 59 வயது பெண்கள், 63, 72 வயது மூதாட்டிகள், 39 வயது வாலிபர், 83 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்தனர்.

நேற்றுடன் மதுரையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளது.

மேலும் செய்திகள்