கிருஷ்ணகிரியில் பயங்கரம்: கார் டிரைவர் ஓட, ஓட விரட்டி குத்திக்கொலை
கிருஷ்ணகிரியில் கார் டிரைவர் ஓட, ஓட விரட்டி குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல் தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 27). கார் டிரைவர். இவருக்கும், வேறு ஒருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. நேற்றும் அவர்கள் போனில் பேசிய போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து சமாதான பேச்சுவார்த்தைக்காக பவுன்ராஜ் கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியம் அருகில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றிற்கு நேற்று மதியம் சென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர், பவுன்ராஜை கத்தியால் குத்தினார்கள். இதனால் பவுன்ராஜ் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார். ஆனாலும் அந்த நபர்கள் விடாமல் ஓட, ஓட விரட்டி சென்று பவுன்ராஜை கத்தியால் சரமாரியாக குத்தினர்.
இதில் ரத்தம் சொட்ட, சொட்ட துறிஞ்சிப்பட்டியில் திருவிழா நடைபெற்று கொண்டிருந்த பகுதிக்கு சென்ற பவுன்ராஜ் அங்கு சாலையில் சரிந்து விழுந்து இறந்தார். இதை பார்த்ததும் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த நிலையில் சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் பிணமாக கிடந்ததை கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பவுன்ராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது குடும்பத்தினர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அவர்கள் பவுன்ராஜின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பவுன்ராஜின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கொலையில் தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதன் காரணமாக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். கிருஷ்ணகிரியில் ஓட, ஓட விரட்டி கார் டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.