ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் - பொதுப்பணித்துறை அதிகாரி உத்தரவு
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்து அரசு ராஜசேகரன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சிப்காட்(ராணிப்பேட்டை),
வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நகரங்களை தலைமையிடமாகக் கொண்டு 3 மாவட்டமாகப் பிரித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். புதிய மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகம் மற்றும் இதர அலுவலக கட்டிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ராணிப்பட்டை மாவட்டத்தில் சென்னையில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் பாரதிநகர் ஐ.வி.பி.எம். அருகே ரூ.118 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தை நேற்று பொதுப்பணித்துறை கட்டிட கட்டுமான மற்றும் பராமரிப்பு வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்து அரசு ராஜசேகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், கட்டிடம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும், எந்தெந்த அலுவலகங்கள் எங்கு வர வேண்டும் என வரைபடம் மூலமாக பொறியாளர்களுக்கு விளக்கினார். கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி, அதை விரைந்து முடிக்க வேண்டும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உடனிருந்தனர்.