6 நாட்களில் ஆயிரம் பேருக்கு பரவியது: விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்தது
விழுப்புரத்தில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் 6 நாட்களில் ஆயிரம் பேருக்கு வேகமாக பரவி உள்ளது மக்களை அச்சமடைய வைத்துள்ளது.
விழுப்புரம்,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிகணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதன் பிடியில் சிக்கி விழுப்பரம் தற்போது ஆட்டம் காண தொடங்கி இருக்கிறது. மாவட்டத்தில் தினந்தோறும் புதிய பாதிப்பானது தொடர்கதையாக நீளுகிறது. மாவட்டத்தில் நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரையில் அனைத்து பகுதியிலும் கொரோனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் வரைக்கும் கொரோனா பாதிப்பு 3,923 ஆக இருந்தது. இதுவரை 2,902 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று சிலரது பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் 129 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 4,052 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம், விழுப்புரம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பிறகு ஜூலை மாதம் 3-ந்தேதியன்று தான் ஆயிரத்தை கடந்தது. அதன் பின்னர் 17-ந்தேதி மொத்த பாதிப்பு 2 ஆயிரமாகவும், 26-ந்தேதி 3 ஆயிரத்தையும் கடந்தது. இதன் பின்னர் நேற்று 4 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. தொடக்கத்தில் ஆயிரத்தை தொட 3 மாதங்களை எடுத்துக்கொண்ட கொரோனா, அதன் பின்னர் ஆயிரம் எண்ணிக்கையை தொடுவதற்கு 14 நாட்கள், 9 நாட்கள் தேவைப்பட்டது. தற்போது 6 நாளில் ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே நிலைமையை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் போதிய அளவில் முகாம்களை அமைத்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மார்க்கெட், கடைவீதிகளில் மக்கள் கூடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதற்கிடையே கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த 62 வயது முதியவர், கொரோன பாதிப்பினால் பெரும்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி விடுதியில் செயல்பட்டுவரும் சித்த மருத்துவமனை கொரோனா வார்டில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.