அரசு, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர் சாவு தலைநகரில் தொடரும் அவலம்

அரசு, தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளார். தலைநகர் பெங்களூருவில் தொடரும் இதுபோன்ற அவல சம்பவங்களால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

Update: 2020-08-02 21:30 GMT
பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனா நோயாளிகளால் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் நிரம்பி வருகின்றன. இதன்காரணமாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க படுக்கை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

மேலும் கொரோனா பீதியால் பிற நோய்களால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுத்து வருகின்றனர். இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட ஒருவர் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் ஆட்டோவிலேயே உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு.

பெங்களூருவில் வசித்து வந்த ஒரு நபருக்கு ஆஸ்துமா பிரச்சினை இருந்தது. அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் அவரை அவருடைய குடும்பத்தினர் மீட்டு ஆட்டோவில் வைத்து விஜயநகரில் உள்ள 2 தனியார் மருத்துவமனைகளுக்கும், விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு சென்றனர்.

ஆனால் கொரோனா பீதியால் அந்த நபருக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளும், அரசு ஆஸ்பத்திரியும் மறுத்து விட்டன. இதனால் அந்த நபர் மல்லேசுவரத்தில் உள்ள கே.ஜி. பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறல் அதிகமாகி அந்த நபர் ஆட்டோவிலேயே உயிரிழந்தார். அவரது உடலை வீட்டிற்கு கொண்டு சென்று அவருடைய குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமலும், டாக்டர்களின் அலட்சியத்தாலும் தான் தங்களது தந்தை இறந்ததாக கூறி மூச்சுத்திணறலால் இறந்தவரின் மகன்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். தலைநகர் பெங்களூருவில் தொடரும் இதுபோன்ற அவல சம்பவங்களால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்