திருமங்கலத்தில், கணவரை கொடூரமாக கொன்றது ஏன்? - கைதான ஆசிரியை பரபரப்பு தகவல்

கணவரை கொடூரமாக கொன்றது ஏன்? என்பது தொடர்பாக கைதான ஆசிரியை பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.

Update: 2020-08-01 23:30 GMT
திருமங்கலம், 

மதுரை மாவட்டம் திருமங்கலம் மாயாண்டி நகரை சேர்ந்தவர் இளங்கோ. இவருடைய மகன் சுதிர் என்ற சுந்தர் (வயது 34). என்ஜினீயரான இவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அருட்செல்வம்(32).

இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ஜெயஸ்ரீ என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது. அடிக்கடி சுந்தர் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தூங்க சென்றவர் கட்டிலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார்.

அவரது உடல் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மர்ம உறுப்பிலும், உடலில் பல இடங்களிலும் காயம் இருந்தது தெரியவந்தது. எனவே சுந்தர் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார், சுந்தரின் மனைவி அருட்செல்வத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், கட்டிலில் இருந்து தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்தார். ஆனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, சுந்தர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில், சுந்தர் மது போதையில் வந்து ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், சம்பவத்தன்றும் மகள் முன்பு உறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்ததாகவும், அதனால் வெறுப்படைந்து கணவரை கொன்று விட முடிவு செய்ததாக ஆசிரியை அருட்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து தனது சித்தி பாலாமணி, அவருடைய மகன் சுமேர் ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அவர்களும் அங்கு வந்துள்ளனர். பின்னர் மதுபோதையில் இருந்த சுந்தரை அடித்து உதைத்தும், மர்ம உறுப்பில் தாக்கியும், கழுத்தை நெரித்தும் அவரது மனைவி கொலை செய்து இருப்பதும் தெரியவந்தது. இதற்கு பாலாமணி, சுமேர் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவருகிறது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்