திருச்சியில் தடைசெய்யப்பட்ட பகுதிகள் தொடர்ந்து அதிகரிப்பு: காந்திமார்க்கெட் பகுதிக்கு நாளை ‘சீல்’

திருச்சி நகரில் தடைசெய்யப்பட்ட பகுதிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காந்திமார்க்கெட் பகுதிக்கு நாளை ‘சீல்’ வைக்கப்படுகிறது.

Update: 2020-07-31 21:45 GMT
திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் ஒரேநாளில் 133 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,146 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 2,557 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவின் பிடியில் சிக்கி இதுவரை 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

திருச்சி மாநகராட்சி பகுதியில் மட்டும் 2,410 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெரிய கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள தெருக்களில் பாதிப்பு அதிகளவில் இருந்ததால் அவை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தற்போது திருச்சி மாநகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் பகுதிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பாலக்கரை செங்குளம் காலனி, வரகனேரி மாமுண்டிசாமி கோவில் தெரு, தாராநல்லூர் கம்பி போட்ட பிள்ளையார் கோவில் தெரு, அரியமங்கலம், பாலக்கரை பள்ளிவாசல் தெரு, உறையூர், ராமலிங்க நகர், கே.கே.நகர் அய்யப்பநகர், ஜே.கே.நகர், பொன்மலைப்பட்டி காந்தி தெரு, நேரு தெரு, திருவெறும்பூர் வின்நகர் ஆகிய பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் இருப்பதால் அவை தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் சவுக்கு கம்புகளால் தடை ஏற்படுத்தப்பட்டு, தகர தடுப்புகளால் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி காந்திமார்க்கெட்டில் 2 நாட்களுக்கு முன் வியாபாரிகள் மற்றும் சுமைப்பணியாளர்கள் 93 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்த 8 பேரும் காந்திமார்க்கெட்டை சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவார்கள்.

இதனை தொடர்ந்து காந்திமார்க்கெட்டை சுற்றி உள்ள தஞ்சாவூர் சாலை, நெல்பேட்டை, மணிமண்டப சாலை, தர்பார்மேடை, பாலக்கரை ரோடு, எடத்தெரு ரோடு, வெல்லமண்டிரோடு, மீன்மார்க்கெட், கிருஷ்ணாபுரம் ரோடு, பழக்கடை பகுதி ஆகிய 10 இடங்களுக்கு நாளை (2-ந்தேதி) இரவு சீல் வைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று திருச்சி நகரில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்ட இடங்களிலும், பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமைப்படுத்தப்பட்ட முகாம், ஸ்ரீரங்கம் யாத்ரீ நிவாஸ் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களை கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

மேலும் செய்திகள்