41 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 6,052 ஆக உயர்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 52 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில், புதுப்பாளையம், போளூர், சேத்துப்பட்டு, செங்கம், பெரணமல்லூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர், ஆக்கூர், வெம்பாக்கத்தில் தலா 2 பேர், தண்டராம்பட்டு, வந்தவாசியில் தலா 3 பேர், கிழக்கு ஆரணியில் 5 பேர், நாவல்பாக்கத்தில் 21 பேர் என மொத்தம் 41 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்து 52 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 4 ஆயிரத்து 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 1,922 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போளூரை அடுத்த களம்பூரை சேர்ந்த 21 வயது கர்ப்பிணி, முருகபாடியை சேர்ந்த 39 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் அவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
போளூருக்கு நேற்று சென்னை, செங்கல்பட்டு, பெங்களூரு, காஞ்சீபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 22 பேர் வந்தனர். பின்னர் அவர்களை போளூர் தாசில்தார் ஜெயவேல் முகாம்களில் தனிமைப்படுத்தி வைத்தார். இதனையடுத்து அவர்களுக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கமிட்டி வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் முகாமில், எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதா தலைமையில் மருத்துவ குழுவினர்கள் மருத்துவ முகாம் நடத்தினர். அதில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதேபோல் ஆரணி மில்லர்ஸ் ரோட்டில் 45 வயது ஆண், ஆரணிப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் 52 வயது பெண், கோபால் தெருவில் 18 வயது இளம்பெண், அருணகிரிசத்திரம் கண்ணப்பன் தெருவில் 28 வயது பெண், பெரியார் நகரில் 35 வயது வாலிபர், ராமகிருஷ்ணாபேட்டை பகுதியில் 25 வயது பெண், இரும்பேடு பழைய காலனியில் 36 வயது பெண், பூசிமலைகுப்பம் கிராமத்தில் 37 வயது ஆண் உள்பட 38 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக கொரோனா சிறப்பு வார்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.