ஏரி சீரமைப்பு பணியில் முறைகேடு: விசாரணை நடத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் மணியரசன் உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு

ஏரி சீரமைப்பு பணிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மணியரசன் உள்பட 24 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2020-07-29 05:32 GMT
திருக்காட்டுப்பள்ளி,

பூதலூர் ஒன்றியத்தில் உள்ள ஆச்சாம்பட்டி கிராமத்தில் 300 ஏக்கர் நிலத்திற்கு பாசனம் தரும் ஆச்சான் ஏரி சீரமைக்கும் பணி மற்றும் இந்த ஏரி வழியாக பாசனம் பெறும் மூன்று மதகுகளை கட்டும் பணி 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளது. இந்த ஏரியில் உள்ள நந்தவன குமுளி கட்டப்படாமல் உள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏரி சீரமைப்பு பணிகளில் முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த முறைகளை கண்டறிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். கட்டி முடிக்கப்படாத நந்தவன குமுளி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் ஆச்சான் ஏரிக்கரையில் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், தஞ்சை மாவட்ட செயலாளர் வைகறை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் லதா, பூதலூர் ஒன்றிய செயலாளர் தென்னவன், மருதையன்(தி.மு.க.), சின்னதுரை(அ.ம.மு.க.), பாலகிருஷ்ணன்(த.மா.கா.) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

24 பேர் மீது வழக்கு

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக செங்கிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கேசவன் கொடுத்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் ஊரடங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் மணியரசன் உள்பட 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்