ஒரே நாளில் 610 பேருக்கு தொற்று: விருதுநகர் மாவட்டத்தில் புதிய உச்சத்தில் கொரோனா முன்னாள் நகரசபை தலைவர் உள்பட 8 பேர் பலி
இதுவரை இல்லாத அளவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. முன்னாள் பெண் நகரசபை தலைவர் உள்பட 8 பேர் பலியாகினர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 54,402 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 10,270 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுவரை 3,918 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 6 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 174 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. விருதுநகர் சிவந்திபுரம் ஆத்து மேட்டில் 45 வயது நபர், அல்லம்பட்டியில் 25 வயது வாலிபர், ஏ.சி.சங்கரலிங்கம் தெருவில் 17 வயது சிறுவன், 43 வயது நபர், இந்திரா நகரில் 24 வயது நபர், என்.ஜி.ஓ. காலனியில் 55 வயது நபர், முத்துராமன்பட்டியில் 69, 29 வயது நபர்கள், உள்தெருவில் 72 வயது நபர், கஸ்தூரிபாய்நகரில் 29 வயது நபர், மேலரதவீதியில் 49 வயது நபர், எப்.எப்.ரோட்டில் 57 வயது நபர், புதுரெயில்வே காலனியில் 52 வயது நபர், ஆர்.எஸ்.ஆர்.நகரில் 18 வயது நபர், கருப்பசாமி நகரில் 25 வயது நபர், பெரியபேராலியில் 2 வயது குழந்தை, ஆயுதப்படை குடியிருப்பில் 31 வயது நபர் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகாசி
சிவகாசியில் ரிசர்வ்லைனில் 38 வயது நபர், சாரதாநகரில் 66 வயது முதியவர், பராசக்திகாலனியில் 29 வயது பெண், ராமசாமிநகரில் 48 வயது நபர், நாரணாபுரத்தில் 48 வயது பெண், பி.கே.என்.ரோட்டில் 58 வயது நபர், லிங்கபுரம் காலனியில் 58 வயது நபர், லட்சுமிநகரில் 39 வயது நபர், ரிசர்வ்லைனில் 2 வயது குழந்தை, திருப்பதி நகரில் 43 வயது பெண், காமராஜர்காலனியில் 58 வயது நபர், திருப்பதி நகரில் 63 வயது நபர் உள்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் எம்.ரெட்டியபட்டி, போடம்பட்டி, அருப்புக்கோட்டை, செட்டிக்குளம், அரசப்பட்டி, காளவாசல், சொக்கநாதன்புதூர், நதிக்குடி, படந்தால், வெம்பக்கோட்டை, வெற்றிலையூரணி, ஆத்தங்கரைப்பட்டி, வத்திராயிருப்பில் 30 பேர், விளம்பட்டியில் 13 பேர், சாத்தூரில் 14 பேர் உள்பட 610 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
7,637 ஆக உயர்வு
இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,637 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிய வேண்டியவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது. இதனை விரைவுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றுக்கும் மேற்பட்ட தனியார் பரிசோதனை மையங்களில் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் தனியார் மையங்களின் செயல்திறன் குறைவாக உள்ள நிலையில் சோதனை முடிவுகள் தெரிவதற்கு தாமதம் ஆகிறது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பரிசோதனை மையத்தின் செயல்திறனை மேலும் அதிகரித்தால் தான் பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் தெரிய வாய்ப்பு ஏற்படும். இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
8 பேர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 8 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். சிவகாசியை சேர்ந்த 66 வயது பெண், மதுரை தனியார் மருத்துவமனையிலும், விருதுநகரை சேர்ந்த 40 மற்றும் 60 வயது நபர்கள் மதுரை தனியார் மருத்துவமனைகளிலும், விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த 51 வயது நபர், விருதுநகரை சேர்ந்த 45 மற்றும் 74 வயது முதியவர் விருதுநகர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
அதேபோல ராஜபாளையம் முன்னாள் பெண் அ.தி.மு.க. நகரசபை தலைவர் மற்றும் டாக்டரும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.