போடி-மதுரை அகல ரெயில்பாதை திட்டத்தில் தண்டவாளங்கள் இணைக்கும் பணி தீவிரம்

போடி-மதுரை அகல ரெயில்பாதை திட்டத்தில் தண்டவாளங்கள் இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-07-29 01:24 GMT
ஆண்டிப்பட்டி, 

மதுரை-போடி இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. சுமார் 90 கி.மீ. தூரமுள்ள இந்த திட்டத்தில் முதற்கட்டமாக மதுரை-உசிலம்பட்டி இடையே 37 கி.மீ. தூரத்துக்கான அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து தேனி வரையிலான அகல ரெயில்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தேனி-மதுரை மாவட்ட எல்லையான கணவாய் மலைப்பகுதியில் மலையை குடைந்து அகல ரெயில்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது.

தண்டவாளங்கள் இணைக்கும் பணி

ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு மலைகளை அகலமாக குடைந்து எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி முதல் தேனி வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் கடந்த மாதம் தொடங்கியது. சுமார் 20 கிலோமீட்டர் தூரம் தண்டவாளங்கள் அமைக்கப்பட்ட நிலையில், தண்டவாளங்களை வெல்டிங் மூலம் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பிரத்யேகமாக ரெயில் தண்டவாளத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட லாரியில் வெல்டிங் செய்யும் எந்திரத்தை ஏற்றிக்கொண்டு தண்டவாளங்களை இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளும் இன்னும் ஒருவாரத்தில் முடிவடையும்.

இதையடுத்து அடுத்தக்கட்டமாக ஆண்டிப்பட்டி கணவாய் மலையில் குடையபட்ட பகுதிகளில் தண்டவாளங்கள் அமைக்கும் பணி தொடங்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்