10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம் மாநில செயலாளர் பேட்டி
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம் என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் கூறினார்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் கொரோனாவால் இறந்த டாஸ்மாக் ஊழியர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சம், இறந்த ஊழியர்களின் வாரிசுக்கு அரசு வேலை, அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை, டாஸ்மாக் கடை செயல்படும் நேரம் குறைப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். முதல்கட்டமாக அவர்கள் நேற்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் 155 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி. டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் மணிகண்டன் அளித்த பேட்டியின் போது கூறுகையில், டாஸ்மாக் பணியாளர்கள் கொரோனா அச்சத்தில் பணியாற்றும் நிலை உள்ளது. கடைகளுக்கு ஆய்வுக்கு வருவோரால் பணியாளர்களுக்கு தொற்று ஏற்படுகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மதுரை, காஞ்சீபுரம், விழுப்புரத்தை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் 4 பேர் இறந்துள்ளனர். இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இந்த கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாநில அளவில் அனைத்து தொழிற்சங்கங்களும் கூடி டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம் நடத்துவோம், என்றார்.