வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,383 ஆக உயர்வு

வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,383 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-29 00:36 GMT
வேலூர்,

வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் வேலூர் ரங்காபுரத்தில் உள்ளது. இங்கு பணியாற்றும் சிலருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டன. அதையடுத்து அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று வந்த பரிசோதனை முடிவுகளில் 2 ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் பணிபுரிந்த அறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அந்த அறைகள் மூடப்பட்டன. மேலும் 2 பேரின் குடும்பத்தினர், அவர்களுடன் பணிபுரிந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் கிருஷ்ணாநகரில் இயங்கி வரும் தனியார் வங்கி ஊழியர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. அதில், 2 வங்கியில் பணிபுரியும் தலா ஒரு ஊழியர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து அந்த 2 வங்கிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பூட்டப்பட்டது. வங்கிக்கு வந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

110 பேருக்கு கொரோனா

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் நர்சு, ஊழியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட சி.எம்.சி. மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் 5 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.

அதைத்தவிர வேலூர் மாநகராட்சி பகுதியை சேர்ந்த இறைச்சி கடை ஊழியர்கள் 2 பேர், தள்ளுவண்டி காய்கறி வியாபாரி, பால் வியாபாரி, ஷூ கம்பெனி ஊழியர், பெட்டிக்கடை உரிமையாளர்கள், வேலூர்-காட்பாடி சாலை தனியார் விடுதியில் தங்கியிருக்கும் தம்பதியின் 2 வயது ஆண் குழந்தை, சைதாப்பேட்டையில் 4 பேர், 9 வயது பெண் குழந்தைகள், சத்துவாச்சாரியில் 83 வயது மூதாட்டி உள்பட மாவட்டம் முழுவதும் 110 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,383 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 207 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,314 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,013 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்