3½ மாதங்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை: வேலைவாய்ப்புகளை இழந்த முதுமலை ஆதிவாசி மக்கள்

3½ மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் முதுமலையில் ஆதிவாசி மக்கள் வேலைவாய்ப்பு இன்றி வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.;

Update: 2020-07-28 23:05 GMT
கூடலூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டது. பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. நீலகிரி சுற்றுலாத்தலங்கள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் முடங்கி உள்ளது. இதனால் நேரடியாக மற்றும் மறைமுகமாக பலர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர்.

கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முதுமலை தலைமையிடமான தெப்பக்காட்டில் ஆதிவாசி மக்கள் நடத்தக்கூடிய கேன்டீன், உணவகங்கள் உள்ளது. சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் பணியாற்றி வந்தனர். இதுதவிர தங்கும் விடுதிகளில் ஏராளமானவர்கள் பணியாற்றி வந்தனர்.

கடந்த 3½ மாதங்களுக்கு மேலாக முதுமலை மூடப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கேன்டீன், உணவகங்கள் மூடப்பட்டது. தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த ஆதிவாசி மக்களும் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.

வேலைவாய்ப்புகளை இழந்த ஆதிவாசி மக்கள்

இதேபோல் முதுமலை அருகே உள்ள மசினகுடி, பொக்காபுரம் பகுதியில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் மூடப்பட்டதால் தனியார் தங்கும் விடுதிகளும் உடனடியாக மூடப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றி வந்த மசினகுடி, பொக்காபுரம் பகுதியை சேர்ந்த ஆதிவாசி மக்கள் நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய காலத்தில் பல்வேறு தரப்பினரும் உணவு பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வந்தனர். இதனால் வருவாய் இல்லாவிட்டாலும் சில வாரங்கள் உணவு பற்றாக்குறை இன்றி வாழ்ந்து வந்தனர். ஆனால் தொடர்ந்து சுற்றுலாத்தலம் மூடி கிடப்பதால் வேலைவாய்ப்பு இன்றி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

இது குறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பகத்தை சார்ந்து வனத்துறை மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் வேலை கிடைத்தது. தற்போது சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படாமல் உள்ளதால் வேலை இன்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. முதுமலையில் சுற்றுலா பயணிகள் வர தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு செயல்பட்டு வந்த கேன்டீன், உணவகங்கள் மூடி கிடக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் பிரச்சினை என்றைக்கு முடிவுக்கு வருமோ தெரிய வில்லை. அதுவரை வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.

மேலும் செய்திகள்