பல்லடம் அருகே வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது போலீஸ் விசாரணை

பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையத்தில் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிந்தது.;

Update: 2020-07-28 06:08 GMT
பல்லடம், 

பல்லடம் அருகே உள்ள குன்னாங்கல்பாளையத்தில் வசிப்பவர் மாதேஷ் (வயது 39). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனக்கு சொந்தமான காரை வீட்டின் அருகே உள்ள ஓலையால் அமைக்கப்பட்ட கார் செட்டில் நிறுத்தி வைத்துள்ளார். நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மாதேஷ் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது பக்கத்து வீட்டைச்சேர்ந்த வெங்கடேஷ் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விவரம் கேட்டபோது உங்களது கார் தீப்பிடித்து எரிகிறது என்று கூறியுள்ளார்.

உடனே மாதேஷ், வெங்கடேஷ் இருவரும் அருகில் இருந்த பக்கெட்டில் தண்ணீர் எடுத்து தீயை அணைக்க முயன்றனர். தீ அதிகமாக பிடித்து எரியவே பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதற்குள் காரின் இருக்கைகள் மற்றும் அருகில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து மாதேஷ் பல்லடம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மர்ம ஆசாமிகள் யாராவது காருக்கு தீ வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்