மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
தஞ்சாவூர்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் செந்தில்குமார், அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சாமி.நடராஜன், குழு நிர்வாகிகள் வீரமோகன், காளியப்பன், கக்கரை சுகுமாரன், கோவிந்தராஜ், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும். விவசாயத்தை வணிக நிறுவனங்களிடம் அடமானம் வைக்கும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் ஒருங்கிணைந்த விற்பனை மையங்கள் குறித்த சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்தை காக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் நீலமேகம் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெயினுலாவுதீன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவையாறு
இதேபோல் திருவையாறை அடுத்த நடுப்படுகை கிராமத்தில் பாஸ்கர் தலைமையில் 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் மின்மோட்டாருக்கு பாடைகட்டி கருப்புக்கொடியுடன் ஊர்வலமாக சென்று காவேரி ஆற்றில் பாடையை தீவைத்து கொளுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜேந்திரன், ஜெயசீலன், பாலசுப்பிரமணியன், அய்யாரப்பன், ராஜலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுகுமாறன் கலந்துகொண்டு பேசுகையில், அவசர சட்டத்தை திரும்பபெறாவிட்டால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.
திருக்காட்டுப்பள்ளி
பூதலூர் வடக்கு ஒன்றிய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் திருக்காட்டுப்பள்ளியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்தி தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் முல்லைகுடி, ஆற்காடு,தோகூர், அகரப்பேட்டை, கடம்பன்குடி, பாதிரகுடி, பழமார்நேரி, ஒரத்தூர், பாபநாசம் படுகை, விஷ்ணம்பேட்டை ஆகிய ஊர்களிலும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.