தர்மபுரி நகரில் அதிகரிக்கும் கொரோனாவால் முக்கிய சாலைகள் மூடப்பட்டன பஸ்நிலைய பகுதியில் கடைகள் அடைப்பு

தர்மபுரி நகரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் முக்கிய சாலைகள் மூடப்பட்டன. இதன்காரணமாக பஸ்நிலைய பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.;

Update: 2020-07-28 05:01 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தர்மபுரி நகரில் குமாரசாமிப்பேட்டை, சத்திரம் மேல்தெரு, வைண்டிங் டிரைவர் சின்னசாமி நாயுடு தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த நிலையில் தர்மபுரி டவுன் பஸ்நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை, பூமார்க்கெட், சின்னசாமி நாயுடு தெருவில் உள்ள 2 ஜவுளிக்கடைகளில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தர்மபுரி நகரில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க வணிக நிறுவனங்கள் மற்றும், கடைகளில் சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதையும் மீறி பல வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

15 நாட்கள் மூட உத்தரவு

இதன்காரணமாக கலெக்டர் மலர்விழி உத்தரவின்பேரில் தர்மபுரி நகரில் பஸ்நிலையங்களை சுற்றி உள்ள பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் ஆய்வு நடத்தினார்கள். அந்த பகுதியில் ஆறுமுக ஆசாமி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமதுஅலி கிளப் ரோடு, அண்ணாதுரைரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய சாலைகளை நகராட்சி அலுவலர்கள் தடுப்புகள் அமைத்து மூடினார்கள்.

இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வணிகர்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது பஸ்நிலைய பகுதியில் உள்ள கடைகளை 15 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே விதிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதனிடையே பஸ்நிலைய பகுதியில் வணிகர்கள், கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த நடமாடும் பரிசோதனை வாகனம் கொண்டு வரப்பட்டது. ஆனால் வணிகர்கள், கடைஊழியர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தயக்கம்காட்டி அங்கிருந்து கலைந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்