“இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது” கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத்தில் பல இடங்களில் கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாத்தூர்,
மின்சார திருத்த சட்டம், வேளாண் விற்பனை பொருள் திருத்த சட்டம் ஆகியவற்றை ரத்து செய்யவும், கூட்டுறவு வங்கிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வலியுறுத்தியும் கருப்பு கொடி ஏந்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் பால்சாமி தலைமையிலும், செயலாளர் ராமசாமி முன்னிலையிலும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் காதர்மொய்தீன், நிர்வாகிகள் சக்கணன், முத்துக்குமார், பாலமுருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் லிங்கம் சேத்தூரிலும், முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி வத்திராயிருப்பிலும் கலந்து கொண்டனர்.
இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை கண்டித்தும், உணவுப்பொருளை பாதுகாப்பு சட்டத்தில் இருந்து நீக்குவதை கண்டித்தும் கருப்பு கொடி ஏந்தி சாத்தூர் வடக்கு ரத வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் சண்முகையா தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணைச் செயலாளர் பழனிகுமார் தொடங்கி வைத்தார். வட்டச் செயலாளர் சாமிநாதன், நகர செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டு கருப்புகொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாய சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க நிர்வாகி தங்கக்கொடி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஜோதிலட்சுமி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பேசினார். மின்சார சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும், கொரோனா நிவாரணம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகரச் செயலாளர் ஜெயக்குமார் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
வத்திராயிருப்பில் அனைத்து விவசாய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சவுந்தரபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, தாலுகா செயலாளர் கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம்
இதேபோல் ஆலங்குளம் அருகிலுள்ள மேலாண்மறைநாட்டில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வெம்பக்கோட்டை ஒன்றிய விவசாயிகள் சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் ஜேசுராஜ் தலைமை தாங்கினார். இதில் வெம்பக்கோட்டை ஒன்றிய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 230 பேர் கலந்து கொண்டனர்.