கவுந்தப்பாடியில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கவுந்தப்பாடியில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-07-28 01:46 GMT
ஈரோடு,

கவுந்தப்பாடி அருகே பழமையான நெடுங்கண்ணி உடனமர் அண்டமுழுதுடையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த கோவிலில் ஒரு கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கல்வெட்டு குறித்து திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்துக்கு கோவில் நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த கல்வெட்டை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த கல்வெட்டு சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என்றும், அதில் கவுந்தப்பாடி என்ற பெயருக்கு பதிலாக ‘கமுந்தப்பாடி’ என்று குறிப்பிடப்பட்டு இருந்ததும் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து திருப்பூர் வீரராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் வே.சுந்தரகணேசன் கூறியதாவது:-

13-ம் நூற்றாண்டு

கவுந்தப்பாடியில் உள்ள அண்டமுழுதுடையார் கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இந்த கோவிலின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது திருப்பணி பொறுப்பாளராக இருந்த அசோகன் என்பவர் கல்வெட்டு தொடர்பாக எங்களுக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து நானும், எங்களது மைய பொருளாளர் ரமேஷ் குமார், தொல்லியல் ஆய்வாளர் துரைசுந்தரம் ஆகியோரும் சேர்ந்து ஆய்வு செய்தோம்.

இந்த கல்வெட்டின் 2 பக்கங்களிலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்தன. ஒரு பக்கத்தில் 17 வரிகளையும், மற்றொரு பக்கத்தில் 24 வரிகளையும் கொண்டிருந்தது. இது 13-ம் நூற்றாண்டில் ஹொய்சாள அரசனான வீரவல்லாளன் காலத்தை சேர்ந்தது. கி.பி.1332-ம் ஆண்டு ஆவணி மாதம் 12-ம் நாள் 24 கொங்கு நாடுகளில் ஒன்றான காஞ்சிக்கூவல் நாட்டை சேர்ந்த ஒருவர் கோவிலுக்கு சந்தியா தீபம் வைக்க 10 பணம் கொடுத்து உள்ளார் என்றும், அவர் போர் வீரர்களுக்கு உணவு சமைத்து கொடுக்கும் அட்டாலை சேவகனாக இருந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அட்டாலை சேவகன் என்பது போர் நடக்கும்போது சமையல்காரராகவும், போர் வீரராகவும் திகழ்பவர்.

கமுந்தப்பாடி

கல்வெட்டில் ஊர் பெயர் ‘கமுந்தப்பாடி’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 13-ம் நூற்றாண்டில் கவுந்தப்பாடி என்ற ஊர் கமுந்தப்பாடி என்று அழைக்கப்பட்டு வந்திருப்பது நமக்கு தெரியவந்து இருக்கிறது. எனவே காலபோக்கில் அது கவுந்தப்பாடியாக மாறி இருப்பதை நாம் உணர முடிகிறது.

மேலும் செய்திகள்