குடிநீர் கேட்டு செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
செஞ்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சி பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்டது குட்டைக்கார தெரு. அந்த பகுதியில் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் முறையிட்டும் சரியான நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் காலி குடங்களுடன் நேற்று பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்ததை அடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.