கடையநல்லூரில் ரூ.3½ லட்சம் கள்ள நோட்டுகளுடன் ஒருவர் கைது

கடையநல்லூரில் ரூ.3½ லட்சம் கள்ள நோட்டுகளுடன் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-27 23:32 GMT
கடையநல்லூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் ஒருவர் கள்ள ரூபாய் நோட்டை மாற்ற சுற்றித்திரிவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் வேல்பாண்டி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்துரை உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கடையநல்லூர் அட்டைகுளம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கள்ள ரூபாய் நோட்டுகள்

விசாரணையில், அவர் தென்காசி கன்னிமார் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாகூர் மீரான் மகன் முகம்மது இஸ்மாயில் (வயது 37) என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் ரூ.500 கள்ள நோட்டுகள் கத்தை, கத்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்துக்கு கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், கலர் ஜெராக்ஸ் எந்திரம் மூலம் ரூபாய் நோட்டை பிரிண்ட் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் இருந்த கலர் ஜெராக்ஸ் எந்திரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரூ.3½ லட்சம் கள்ள நோட்டுகளுடன் ஒருவர் பிடிபட்ட சம்பவம் கடையநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்