திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 474 பேருக்கு கொரோனா தொற்று

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-07-27 22:41 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம், நேதாஜி சாலை, மகாத்மா காந்தி சாலை போன்ற பகுதிகளில் தலா 3 பேரும், சி.வி. நாயுடு சாலையில் 2 பேர் என நேற்று 11 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடம்பத்தூர் ஒன்றியத்தில் மணவாளநகர், கீழ்நல்லாத்தூர், தண்டலம், கூவம், போளிவாக்கம், கொப்பூர், பேரம்பாக்கம், ஏகாட்டூர், கடம்பத்தூர், உளுந்தை, பாப்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 22 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 12 ஆயிரத்து 320 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 ஆயிரத்து 108 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 3,998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் இறந்துள்ளனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 214 ஆனது.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஹாஸ்டல் தெருவில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 வயது சிறுவன், 10 வயது சிறுவன், 36 வயது பெண், 64 வயது மூதாட்டி, 5 வயது சிறுமி உள்பட நேற்று 448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 12 ஆயிரத்து 717 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 9,180 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,304 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் இறந்ததால் பலியானோர் எண்ணிக்கை 233 ஆக உயர்ந்தது.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மணிமங்கலம் அருகே சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 362 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 7 ஆயிரத்து 527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 4,542 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 2,891 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 94 ஆனது.

மேலும் செய்திகள்