கொரோனாவுக்கு 6 பேர் பலி: கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 220 பேருக்கு தொற்று - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,457ஆக உயர்வு

கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் உள்பட 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,457ஆக உயர்ந்து உள்ளது. கொரோனாவுக்கு 6 பேர் பலியாகி உள்ளனர்.;

Update:2020-07-27 12:41 IST
கோவை,

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,237 ஆக இருந்தது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,457ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் விவரம் வருமாறு:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை அனுமதிக்கும் ஐ.எல்.ஐ. சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த 28 வயது பயிற்சி டாக்டர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்து அவரின் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் 48 வயது ஆண் மருத்துவ பணியாளருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கோவை செல்வபுரத்தில் 27 பேருக்கும், டவுன்ஹால் பகுதியில் 25 பேருக்கும், கணபதியில் 10 பேருக்கும், ராமநாதபுரத்தில் 9 பேருக்கும், பொள்ளாச்சியில் 8 பேருக்கும், பேரூர், சரவணம்பட்டியில் தலா 7 பேருக்கும், உக்கடம், சிங்காநல்லூர், குனியமுத்தூரில் தலா 6 பேருக்கும், சித்தாபுதூரில் 5 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 122 ஆண்கள், 98 பெண்கள் என மொத்தம் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

கோவை கைகோளம்பாளையம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த 62 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 21-ந் தேதி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அவர் இறந்தார்.

இதேபோல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போத்தனூரை சேர்ந்த 75 வயது முதியவர், உக்கடத்தை சேர்ந்த 62 வயது மூதாட்டி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிங்காநல்லூரை சேர்ந்த 60 வயது முதியவர் ஆகியோர் உயிரிழந்தனர். கோவை வரதராஜபுரத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் 23-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே அன்றைய தினம் இரவே மூதாட்டி உயிரிழந்தார். அவரின் பரிசோதனை முடிவு நேற்று வந்தது அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. இதன் மூலம் கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 58-ஆக உயர்ந்து உள்ளது.

திருப்பூர் மாவட்டம் முத்தப்பன் செட்டியார் காலனியை சேர்ந்த 47 வயது ஆண் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த 1-ந் தேதி கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். வெளிமாவட்டம் என்பதால் அவருடைய உடல் சொந்த ஊர் எடுத்து செல்லப்படவில்லை. கோவையிலேயே தகனம் செய்யப்பட்டது.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்