மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீடுகளில் முடக்கம் - கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடின

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி நேற்று பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். கடைகள் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-07-27 06:00 GMT
நாமக்கல், 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று 4-வது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் மருத்துவமனைகள், மருந்து கடைகள் மற்றும் ஆவின் பாலகம் தவிர மீதமுள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், சாலைகள் வெறிச்சோடி இருந்தன.

நாமக்கல் நகரை பொறுத்த வரையில் கடைவீதி, மெயின்ரோடு, திருச்சி சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை, மோகனூர் சாலை, சேந்தமங்கலம் சாலை, துறையூர் சாலை என அனைத்து சாலைகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள் திறந்து இருந்தாலும் பொதுமக்கள் கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.

ஆங்காங்கே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போது தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் லாரி, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் நகர் முழுவதும் அமைதி நிலவியது. முழு ஊரடங்கை யொட்டி நேற்று உழவர்சந்தைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.

இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், அதிகாலை 4 முதல் காலை 6 மணி வரை பெரும்பாலான இறைச்சி கடைகள் திறந்து இருந்தன. அவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

முழு ஊரடங்கு காரணமாக ராசிபுரத்தில் முக்கிய இடங்களில் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இறைச்சி கடைகள் திறக்கப்படவில்லை. ஒரு சில மருந்து கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஊரடங்கு காரணமாக ராசிபுரம் புதிய பஸ் நிலையம், கடை வீதிகள், கவரைத் தெரு, கச்சேரி வீதி உள்பட அனைத்து தெருக்களும், சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய இடங்களில் போலீசார் நின்றனர். அதேபோல் ஆண்டகளூர், குருசாமிபாளையம், காக்காவேரி, பட்டணம் உள்பட கிராமங்களிலும் கடைகள் திறக்கப்படவில்லை. நேற்று முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் திருச்செங்கோடு, பரமத்திவேலூர், மோகனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்