4-வது வாரமாக மாவட்டத்தில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு - கடைகள் அடைப்பு-சாலைகள் வெறிச்சோடின
சேலம் மாவட்டத்தில் 4-வது வாரமாக தளர்வுகள் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
சேலம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6-ம் கட்டமாக கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 31-ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஊரடங்கில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று 4-வது வாரமாக சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சேலம் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அடைக்கப்பட்டன.
சேலத்தில் வர்த்தக கேந்திரமாக செயல்படும் செவ்வாய்பேட்டை, லீபஜார், பால் மார்க்கெட், கடைவீதி, புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலையம், சொர்ணபுரி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அழகாபுரம், அன்னதானபட்டி உள்பட பல்வேறு இடங்களில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
பொதுமக்கள் வெளியே வராமல் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். அரசு உத்தரவை மீறி கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டு உள்ளதா? என அதிகாரிகள் வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, ஆட்டையாம்பட்டி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஜலகண்டபுரம் ஆகிய 11 உழவர் சந்தைகளும் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டுகளும் நேற்று திறக்கப்படவில்லை.
சேலத்தில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் புதிதாக கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலம், கந்தம்பட்டி பைபாஸ் மேம்பாலம் உள்பட அனைத்து மேம்பாலங்களும், சாலைகளிலும் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. அதேசமயம் அத்தியாவசிய காரணங்களுக்காக இல்லாமலும், உரிய அடையாள அட்டை இல்லாமலும் சென்ற வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.
பிரதான சாலைகள் தவிர பிற இடங்களில் சாலையின் குறுக்கே போலீசார் தடுப்புகள் வைத்து தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. மாவட்டத்தில் கிராமப்புறங்களிலும் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வீடுகளிலேயே இருந்தனர். கூலித் தொழிலாளர்களும், விவசாயிகளும் வேலைக்கு செல்லவில்லை. சேலம் மாவட்டத்தில் அம்மா உணவகங்கள் மற்றும் மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஆம்புலன்ஸ் சேவை, பால் விற்பனை உள்ளிட்ட சேவைகள் தங்கு தடையின்றி செயல்பட்டது.
சேலம், ஓமலூர், எடப்பாடி, தாரமங்கலம், மேட்டூர், கொளத்தூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி, ஏற்காடு, மேச்சேரி, கெங்கவல்லி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த முழு ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது. வரும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதைபோன்று முழு ஊடங்கு கடைபிடிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா? என்பது தமிழக அரசின் முடிவை பொறுத்தே அமையும்.
எனவே சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.