4-வது வார முழு ஊரடங்கு: பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின - வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம்

4-வது வாரமாக நேற்று கடைப்பிடிக்கப்பட்ட முழு ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.;

Update: 2020-07-26 22:15 GMT
புதுக்கோட்டை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லா முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் 4-வது முறையாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் புதுக்கோட்டையில் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கினர். மருந்து, பால் கடைகளை தவிர காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் உள்பட அனைத்து வணிக கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இல்லாமல் இருந்தது. இதனால் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள், புதிய பஸ் நிலைய பகுதி, மகளிர் கல்லூரி சாலை உள்ளிட்ட சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. இருப்பினும் ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சென்றனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து எச்சரித்தனர். தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

இதற்கிடையில் வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி மற்றும் தாசில்தார் முருகப்பன் ஆகியோர் ஆங்காங்கே சென்று கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். டி.வி.எஸ். கார்னர் அருகே மீன் கடை ஒன்று செயல்பட்டு வருவது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். வியாபாரியை எச்சரித்து மீன்களை எடுத்து செல்ல அறிவுறுத்தினர். அந்த மீன்கள் துர்நாற்றம் வீசிய நிலையில் காணப்பட்டன. கெட்டுப்போன மீன்களை வைத்து வியாபாரம் செய்தது தெரியவந்தது. அவற்றை விற்பனை செய்யாமல் அழித்து விட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பொன்னமராவதி பகுதியிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பஸ் நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பல பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ஆதனக்கோட்டை மற்றும் பெருங்களூர் கிராமங்களில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. ஆவுடையார்கோவில் பகுதியில் மருந்து கடை, பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மணமேல்குடி பகுதியில் மருந்து கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு, ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்