பிரதமர் மோடியின் பாராட்டு சாதனைகள் படைக்க ஊக்கம் தருவதாக இருக்கிறது - நாமக்கல் மாணவி கனிகா பேட்டி
பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் தருவதாக இருக்கிறது என நாமக்கல் மாணவி கனிகா கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்தவர் நடராஜன். லாரி டிரைவர். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு சிவானி, கனிகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
நாமக்கல் கிரீன்பார்க் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி கனிகா நடந்து முடிந்த தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இந்த நிலையில் நேற்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, லாரி டிரைவர் நடராஜனின் மகள் கனிகாவுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது நாமக்கல் என்றாலே ஆஞ்சநேயர் தான் நினைவுக்கு வருவார் என்று கூறிய அவர், இனி கனிகாவும் நினைவுக்கு வருவார். கடினமான சூழ்நிலையில் இது போன்று சாதிக்கக்கூடிய ஏராளமான மாணவ-மாணவிகள் நமது நாட்டில் உள்ளனர் என்று கூறினார்.
முன்னதாக மாணவியிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். வணக்கம் என்று கூறி தனது உரையை அவர் தொடங்கினார். அதன் விவரம் வருமாறு:-
பிரதமர் மோடி: பிளஸ்-2 தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் எதிர்பார்த்தீர்கள்?
மாணவி கனிகா: 485 அல்லது 486 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது 490 கிடைத்து இருக்கிறது.
பிரதமர் மோடி: அதிக மதிப்பெண் பெற எப்படி தயாரானீர்கள்?
மாணவி கனிகா: கடினமாக உழைத்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது.
பிரதமர் மோடி: எந்த பாடம் உங்களுக்கு பிடிக்கும்?
மாணவி கனிகா: கணித பாடம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பிரதமர் மோடி: எதிர்காலத்தில் படித்து என்னவாக விரும்புகிறீர்கள்?
மாணவி கனிகா: டாக்டராக விரும்புகிறேன்.
பின்னர் குடும்ப உறுப்பினர்கள் குறித்து பிரதமர் மோடி கேட்டார். அதற்கு தந்தை லாரி டிரைவர் எனவும், சகோதரி டாக்டருக்கு படித்து வருவதாகவும் மாணவி கூறினார். பின்னர் ஏழை குடும்பத்தில் பிறந்து, நல்ல முறையில் கல்வி கற்று டாக்டராக வரவேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் மாணவிக்கு வாழ்த்து கூறிய பிரதமருக்கு மாணவி கனிகா நன்றி தெரிவித்தார். மாணவியின் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கும் பிரதமர் வாழ்த்துகளை தெரிவித்தார்.
இது குறித்து மாணவி கனிகா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது :-
நாட்டின் பிரதமர் என்னை பாராட்டுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி என்னை பாராட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன்.
அதே நேரத்தில் பிரதமரின் பாராட்டு இன்னும் பல சாதனைகளை படைக்கு ஊக்கம் தருவதாக இருக்கிறது. எதிர்காலத்தில் நான் டாக்டருக்கு படித்து நரம்பியல் நிபுணராகி சேவை செய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து மாணவியின் தந்தை நடராஜன் கூறும்போது, நான் கனவில் கூட இதை எதிர்பார்க்கவில்லை. நாட்டின் பிரதமர் எனது மகளை பாராட்டி இருப்பது எங்கள் குடும்பத்திற்கு மட்டும் இன்றி, நாமக்கல் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது என்றார்.
மாணவி கனிகா 10-ம் வகுப்பில் 500-க்கு 475 மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இவரது சகோதரி சிவானி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படிப்பை நிறைவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.