பெரம்பலூரில் மேலும் 26 பேருக்கு கொரோனா - அரியலூரில் 27 பேர் பாதிப்பு
பெரம்பலூரில் 26 பேரும், அரியலூரில் 27 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 296 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர். இதில், குணமடைந்த 217 பேர் வெவ்வேறு தேதிகளில் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவந்த சித்த மருத்துவர் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சியுள்ள 89 பேர் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் பெரம்பலூர், ஆலம்பாடி, பூலாம்பாடி, பெருமத்தூர், லெப்பைக்குடிகாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 26 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது சுகாதாரத்துறையினரால் நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 4 பேர் திருச்சியிலும், ஒருவர் சேலத்திலும், மீதமுள்ள 21 பேர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இந்த 26 பேர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது குடியிருப்பு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சுகாதாரத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் அரியலூரில் நேற்று மொத்தம் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அரியலூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.