புதிதாக 434 பேருக்கு கொரோனா: நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 4 பேர் பலி தென்காசியில் 73 பேருக்கு தொற்று உறுதி

நெல்லை, தூத்துக்குடியில் புதிதாக 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 4 பேர் பலியானார்கள்.

Update: 2020-07-27 00:10 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மேலும் 186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,773-ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இதுவரை மொத்தம் 2,347 பேர் பூரண குணமடைந்து ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு பட்டியலில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மட்டும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி, ஆஸ்பத்திரியில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்கள் ஆவார்கள். இதுதவிர நெல்லை மாநகரில் போலீசார் மற்றும் பொதுமக்கள் என 85 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ராதாபுரம் பகுதியில் 37 பேருக்கும், பாளையங்கோட்டை புறநகர் பகுதியில் 21 பேருக்கும், வள்ளியூர் பகுதியில் 15 பேருக்கும், மானூர் பகுதியில் 14 பேருக்கும், அம்பை பகுதியில் 9 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

4 பேர் பலி

களக்காடு அருகே கீழப்பத்தையை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான 46 வயது முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. ஏற்கனவே களக்காட்டில் நகைக்கடை அதிபரும், மூதாட்டியும் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 248 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகள், கோவில்பட்டி, காயல்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 542 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 3 ஆயிரத்து 199 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 29 பேர் இறந்துள்ளனர். 2 ஆயிரத்து 314 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த காயல்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் 75 வயது பெண், 52 வயது ஆண், 42 வயது ஆண் ஆகியோர் ஆவர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,682 ஆக உயர்ந்துள்ளது. இதில் 869 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 801 பேர் தென்காசி, நெல்லை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்