தஞ்சை அருகே குடம், குடமாக கள் பறிமுதல் - மாத்திரையை கலந்து விற்பனை செய்த முதியவர் கைது
தஞ்சை அருகே குடம், குடமாக மீண்டும் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாத்திரையை கலந்து விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை பகுதிகளில் பல்வேறு இடங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக்சேகர் சஞ்சய்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தனிப்படை போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன் பேரில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலூரை அடுத்த ராஜேந்திரம்தோப்பு பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குடம், குடமாக கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்திற்குட்பட்ட கொல்லாங்கரை பகுதியில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் பிரகாசம், ஏட்டுகள் மோகன், உமாசங்கர், இளைய ராஜா, சிவக்குமார், அழகு சுந்தரம், அருண் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு கள் இறக்கி விற்பனை செய்த பனங்காடு தில்லைநகரை சேர்ந்த ஜெயராமன் (வயது68) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 குடங்களில் இருந்து 200 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கள் விற்பனை செய்த தொகை ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.
தென்னந்தோப்பில் இருந்து கள் இறங்கி வந்து அதில் போதைக்காக மாத்திரையை கலந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தென்னந்தோப்பில் கள் இறக்குவதற்காக கட்டப்பட்டு இருந்த பானைகளும் அடித்து உடைக்கப்பட்டன. இதை யடுத்து கைது செய்யப்பட்ட வரையும், பறிமுதல் செய்த கள்ளையும் தனிப்படையினர், தஞ்சை மாவட்ட கலால் துறையிடம் ஒப்படைத்தனர்.