நடிகை வனிதா விஜயகுமார் அளித்த புகாரில் கைதான சூர்யாதேவி, பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

நடிகை வனிதா விஜயகுமார் குறித்து அவதூறாக பேசியதாக கைதான பெண் சூர்யாதேவி மற்றும் அவரை கைது செய்த பெண் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா உறுதியானது.

Update: 2020-07-26 22:13 GMT
பூந்தமல்லி,

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் குறித்தும், தன்னைப்பற்றியும் சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமம், தசரதபுரத்தை சேர்ந்த சூர்யா தேவி(வயது 27) என்ற பெண் “யூடியூப்பில்” அவதூறாக கருத்து தெரிவித்து இருப்பதாக போரூர் போலீஸ் நிலையத்தில் வனிதா விஜயகுமார் புகார் அளித்தார்.

பதிலுக்கு சூர்யா தேவி, தன்னை குறித்து அவதூறாக பேசியதாக வனிதா விஜயகுமார் மீது வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த இரண்டு வழக்குகளும் வடபழனி அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை செய்தனர்.

இதையடுத்து சூர்யா தேவி கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொரோனா உறுதி

கைது நடவடிக்கை விதிமுறைப்படி முன்னதாக சூர்யா தேவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரை கைது செய்த மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவியும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். தற்போது அந்த பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன.

இதில் கைதான சூர்யாதேவி மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ஆகிய 2 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதையடுத்து சூர்யா தேவி வீட்டுக்கு சுகாதார துறை ஊழியர்கள் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. கொரோனா உறுதியானதும் அவர் தலைமறைவாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சூர்யா தேவி வீட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற நோட்டீசை ஒட்டிய சுகாதார துறையினர், அந்த நோட்டீசில் அவர் தலைமறைவாகி விட்டதாக பேனாவால் எழுதி வைத்து உள்ளனர்.

சூர்யாதேவி வீடியோ

இதையடுத்து சூர்யா தேவி கைது செய்யப்படும்போது போலீஸ் நிலையத்தில் உடன் இருந்ததாக கூறப்படும் நடிகை வனிதா மற்றும் போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்கிடையில் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், அப்படியே இருந்தாலும் குடும்பத்துடன் தனிமைப்படுத்திக்கொண்டு தன்னை பார்த்துக்கொள்வதாகவும், போலீசாருக்கு எதிராகவும் சூர்யா தேவி ஆவேசமாக பேசிய வீடியோ ஒன்றை “யூடியூப்பில்” வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்