மேலும் 131 பேருக்கு தொற்று: புதுச்சேரியில் கொரோனாவுக்கு புதிதாக 2 பேர் பலி சாவு எண்ணிக்கை 40 ஆனது

புதுச்சேரியில் புதிதாக நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது. தொற்றால் 131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-07-26 21:47 GMT
புதுச்சேரி,

மாநிலத்தில் 624 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 127 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 131 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் 2,787 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46, ஜிப்மரில் 10, கொரோனா கேர் சென்டரில் 11, காரைக்காலில் 9, ஏனாமில் 8 என மொத்தம் 84 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,645 ஆகும். 1,102 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

2 பேர் பலி

இந்தநிலையில் மேட்டுப் பாளையம் சண்முகாபுரத்தை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காய்ச்சல், சளி காரணமாக கடந்த 16-ந் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். 18-ந் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த 57 வயது நபர் உயர் ரத்த அழுத்தம், நரம்பு கோளாறு காரணமாக கை, கால் செயலிழந்த நிலையில் கடந்த 23-ந் தேதி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 24-ந்தேதி இறந்தார். முன்னதாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது தற்போது தெரியவந்தது. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.

இதுதவிர புதுவையில் 94 பேர், ஏனாமில் 10 பேர் என 104 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 35,080 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 236 முடிவுகள் காத்திருப்பில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்