மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் 20 சதவீதம் பேருக்கு தொற்று புதிதாக 9,431 பேருக்கு பாதிப்பு

மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை செய்தவர்களில் சுமார் 20 சதவீதம் பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. புதிதாக 9 ஆயிரத்து 431 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-07-26 20:41 GMT
மும்பை,

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது. நோய் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதில் நேற்று இங்கு 9 ஆயிரத்து 431 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரத்து 799 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 1 லட்சத்து 48 ஆயிரத்து 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் குணமடைந்தவர்கள் சதவீதம் 56.74 ஆக உள்ளது.

19.92 சதவீதம் பேருக்கு தொற்று

இதேபோல மாநிலத்தில் மேலும் 267 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 13 ஆயிரத்து 656 பேர் வைரஸ் நோய்க்கு உயிரிழந்து இருக்கிறார்கள். மாநிலத்தில் நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் சதவீதம் 3.63 ஆக உள்ளது.

இதுவரை 18 லட்சத்து 86 ஆயிரத்து 296 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.92 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 8 ஆயிரத்து 420 பேர் வீடுகளிலும், 44 ஆயிரத்து 276 பேர் அரசு மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

50 ஆயிரத்தை தாண்டியது

மராட்டியத்தில் மும்பையை தவிர்த்த மற்ற பகுதிகளில் நோய் பாதித்தவா்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் புனே மாநகராட்சியில் ஒரே நாளில் 1,921 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதித்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

தானே மாநகராட்சியில் 296 பேருக்கும், நவிமும்பையில் 406 பேருக்கும், கல்யாண்- டோம்பிவிலியில் 358 பேருக்கும், ராய்காட்டில் 309 பேருக்கும் புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

முக்கிய பகுதிகள்..

மாநிலத்தின் மற்ற முக்கிய பகுதிகளில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் மற்றும் அடைப்புகுறிக்குள் பலியானவர்கள் விவரம் வருமாறு:-

தானே மாநகராட்சி - 19,218 (666 பேர் பலி), தானே புறநகர் - 12,323 (263), நவிமும்பை மாநகராட்சி - 15,238 (402), கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி - 21,058 (377), உல்லாஸ் நகர் மாநகராட்சி - 6,700 (131), பிவண்டி மாநகராட்சி - 3,678 (249), மிரா பயந்தர் மாநகராட்சி - 8,143 (258), வசாய் விரார் மாநகராட்சி - 11,080 (265), ராய்காட் - 8,173 (147), பன்வெல் மாநகராட்சி - 6,407 (135). நாசிக் மாநகராட்சி - 8,171 (234), புனே மாநகராட்சி - 50,291 (1,276), பிம்பிரி சிஞ்வட் மாநகராட்சி - 17,022 (301).

மேலும் செய்திகள்