வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்: வடசேரி பஸ் நிலையம்- சந்தையில் 170 கடைகளை திறக்க முடிவு - மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தகவல்

வடசேரி பஸ் நிலையம், சந்தையில் 170 கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்று பரவாமல் தடுக்க வியாபாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-07-26 05:45 GMT
நாகர்கோவில்,

கொரோனா பரவியதை தொடர்ந்து நாகர்கோவில் வடசேரியில் செயல்பட்டு வந்த கனகமூலம் சந்தை மூடப்பட்டது. அதற்கு பதிலாக வடசேரி பஸ் நிலையத்தில் தற்காலிக சந்தை செயல்பட்டு வந்தது. இங்கும் வியாபாரிகள், சுமைதூக்கும் பணியாளர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் போன்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து இந்த தற்காலிக சந்தையும் மூடப்பட்டது.

இந்தநிலையில் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. வடசேரி பஸ் நிலையத்தில் மீண்டும் தற்காலிக சந்தையை திறப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

இதையடுத்து நேற்று நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஆணையர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால், அதிகாரிகள் மற்றும் வடசேரி கனகமூலம் சந்தையைச் சேர்ந்த வியாபாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக வடசேரி பஸ் நிலையத்தில் 85 கடைகளையும், கனகமூலம் சந்தையின் வெளிப்பகுதிகளில் 85 கடைகளும் ஆக மொத்தம் 170 கடைகளை திறக்க முடிவு செய்திருப்பதாக ஆணையர் தெரிவித்தார்.

அவ்வாறு சந்தையை திறக்கும்போது வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து ஆணையர் ஆஷா அஜித் கூறியதாவது:-

சந்தையிலும், வடசேரி சந்தையிலும் ஒரு வழிப்பாதை மட்டுமே இருக்க வேண்டும். அதில் சந்தைக்குள் வருபவர்களுக்கு தனியாகவும், பொருட்கள் வாங்கிவிட்டுச் செல்பவர்களுக்கு தனியாகவும் கம்புகட்டி பாதை அமைக்க வேண்டும். சந்தைக்குள் வருபவர்களுக்கு வியாபாரிகள் சார்பில் முககவசம், சானிட்டைசர், கை கழுவும் வசதி ஏற்படுத்தி சுத்தப்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டும். உடல் வெப்பத்தை பரிசோதனை செய்யக்கூடிய தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை மூலம் சந்தைக்கு வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும்.

பொருட்கள் வாங்க வருபவர்களுக்கு வியாபாரிகளே பொருட்களை எடைபோட்டு வழங்க வேண்டும். அவர்களை தேர்வு செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு கடைக்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி விட்டு கடைகளை அமைக்க வேண்டும். கடைகளை அமைத்தபிறகு அவற்றுக்கு மாநகராட்சி சார்பில் எண் ஒதுக்கீடு செய்யப்படும். கனகமூலம் சந்தையில் உள்ள வியாபாரிகள் மட்டும்தான் இந்த 2 இடங்களிலும் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சந்தையில் வியாபாரிகளும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவற்றை பின்பற்றாத கடைகள் மூடப்படும்.

இவ்வாறு ஆணையர் ஆஷா அஜித் கூறினார்.

பஸ் நிலையத்திலும், கனகமூலம் சந்தையிலும் கடைகளை அமைக்க வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளை அமைத்ததும் சந்தைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். ஒருசில நாட்களில் இந்த 2 சந்தைகளும் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்