கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக்கோரி 8 கிராம மீனவர்கள் போராட்டம் - இரையுமன்துறை, தேங்காப்பட்டணத்தில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடிக்கக்கோரி இரையுமன்துறை, தேங்காப்பட்டணத்தில் கருப்பு கொடி ஏந்தி 8 கிராம மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
கொல்லங்கோடு,
தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் கடந்த 23-ந் தேதி அலையில் சிக்கி கட்டுமரத்தில் மீன்பிடிக்க சென்ற முள்ளூர்துறையை சேர்ந்த ஆன்டணி (வயது 65) என்பவர் மாயமானார்.
தொடர்ந்து நேற்று முன்தினம் மீன்பிடித்து விட்டு துறைமுகத்திற்கு படகில் வந்த போது சீற்றம் காரணமாக படகு முகத்துவாரத்தில் உள்ள அலை தடுப்பு சுவரில் மோதி படகு உடைந்தது. இதில் மார்த்தாண்டன் துறையை சேர்ந்த ஷிபு (23) என்ற மீனவர் மாயமானார். இது மீனவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மாயமான மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கேட்டும், அவர்களை மீட்க கோரியும், துறைமுக முகத்துவாரத்தில் தேங்கியுள்ள மணலை அகற்ற கோரியும், மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடித்து வரும் போது விபத்து ஏற்படாத வகையில் துறைமுகத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை இரையுமன்துறை முதல் நீரோடி வரையுள்ள 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள், மீனவ சங்கங்களின் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் ஒன்று திரண்டனர்.
பின்னர், அவர்கள் இரையுமன்துறை மீன் விற்பனை கூடத்திலிருந்து தெற்காசிய மீனவ தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு துறைமுக முகத்துவாரத்தில் கருப்பு கொடியை நாட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, முகத்துவாரத்தில் படகுகள் விபத்துக்குள்ளான பகுதியில் சிலர் வள்ளங்களில் கருப்பு கொடிகளை கட்டியபடி வலம் வந்தனர்.
இதேபோல் சின்னத்துறையில் நாம் தமிழர் கட்சி சார்பில், தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் விபத்து ஏற்பட்டால் மீனவர்களை மீட்க அரசு சார்பில் படகு நிறுத்த வேண்டும், மீனவர்கள் மீன்பிடிக்க பாதுகாப்பான முறையில் துறைமுகத்தை அமைக்க வேண்டும், மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும், அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் முஞ்சிறை ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் தலைமை தாங்கினார். இளைஞர் பாசறை செயலாளர் மெஜில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.