பல்லடத்தில், அடுக்குமாடி கட்ட எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் சிறைபிடிப்பு
பல்லடம் ராம்நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆய்வு பணிக்காக வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.;
பல்லடம்,
பல்லடம் நகராட்சி ராம்நகரில் உள்ள ஓடை அருகில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 128 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அந்தபகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அந்த குடியிருப்பு கட்டப்படும் இடத்தில் ஆய்வு பணிக்காக வந்த அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ராம்நகர் பகுதி மக்கள் கூறியதாவது:-
மழை காலங்களில் பெய்யும் மழைநீர் அனுப்பட்டி குட்டையிலிருந்து வேலப்பகவுண்டம்பாளையம், பணிக்கம்பட்டி, பாலசமுத்திரம் வழியாக இந்த ஓடை வழியாக வந்து பல்வேறு ஊர்களின் வழியாக சென்று கடைசியில் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. காலப்போக்கில் மழை குறைவு,போன்ற பல்வேறு காரணங்களால் ஓடை சுருங்கிவிட்டது. இந்த ஓடை அருகில் சுமார் இரண்டரை ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் அம்மா பூங்கா, விளையாட்டு திடல், திருமண மண்டபம் போன்றவை அமைத்து தர அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரியவருகிறது. இதனால் நீர் நிலை வழித்தடம் அடைபடகூடிய அபாயம் உள்ளது. மேலும் நீர் வழிப்பாதையானது ஆக்கிரமிப்புகளால் அகலம் குறைந்துள்ளது. மேலும் ராம் நகரில் ரோடுகள் மிகவும் சிறிதாக உள்ளதால் வாகனம் செல்வதில் சிரமம்உள்ளது. அவசரகாலத்தில் தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் பழமையான ஓடை நீர் நிலை புறம்போக்கு நிலம் என்பதால் அந்த இடத்தில் பெரிய கட்டிடம் கட்டும் போது அதன் உறுதித்தன்மை இழக்க நேரிடும், கட்டிடங்கள் வலுவிழந்து இடிந்து விடும், அதனால் இந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டக்கூடாது என்பதை வலியுறுத்திவருகிறோம் என்றனர்.
அதிகாரிகளை சிறைபிடித்த சம்பவம் குறித்து தகவலறிந்த பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார், பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம்,அந்த இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தை முடிவில் முறையான உத்தரவுகள் பெற்று அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இது குறித்து மாற்று கருத்து இருந்தால் கலெக்டரிடம் மனு அளிக்குமாறு, அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அதிகாரிகளை விடுவித்து கலைந்து சென்றனர்.